மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது.
பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்துகொண்டனர்.
தலைமை உரையாற்றிய பிரதேச செயலர் சா.சுதர்சன், வடக்கு மாகாண ஆளுநரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இலங்கையில் மூன்றாம் மொழியாக சைகை மொழியை அரசாங்க அலுவலர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கோரிய அவர், தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம மட்ட அலுவலர்கள் 35 பேருக்கு அவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட அலுவலர்களுக்கு இதனை விரிவாக்கவேண்டும் என ஆளுநரிடம் கோரினார். மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்கல்வி நிலையத்தின் அவசியத்தை வலியுறுத்திய அவர் அதனை அமைக்கவேண்டும் எனவும் கோரினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உரையாற்றிய பீடாதிபதி சி.ரகுராம் அவர்கள், தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சமூகத்தின் நாடித்துடிப்பை அறிந்த ஒருவர். ஒடுக்கப்படும் சமூகத்தின் குரலாக அவர்களின் கரிசனையின்பால் அக்கறை கொண்ட ஒருவராக அறியப்பட்டவர். அவர் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் முன்வைக்கும் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித்தருவார் என நம்புகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
தற்போதைய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய பீடாதிபதி சி.ரகுராம், உயரம் குறைந்த படிகளை உடைய பேருந்துகளை ஒரு சில வழித்தடங்களிலாவது சேவையில் ஈடுபடுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினார்.
இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களில் ஒருவர் கூட தமக்கு நிவாரணம் தேவை என்று கேட்டதில்லை. உடலில் எந்தக் குறைபாடுகளும் இல்லாதவர்கள் நிவாரணம் தேவை, அது தேவை, இது தேவை என்று நாடும்போதும் அவர்கள் அப்படி எங்களை நாடியதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று சாதிக்கவே விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கடின உழைப்பு இருக்கின்றது.
மாற்றாறல் உடையவர்கள் அரச அலுவலகங்களை அணுகும் வசதியை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தற்போதைய யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன் அவர்கள் மிகச் சிறந்த ஒருவர் எனக்குறிப்பிட்ட ஆளுநர், அவரைப்போன்று திறமையான அதிகாரிகள் பலர் இருந்தால் எமது பிரதேசம் விரைவாக வளர்ச்சியடைந்திருக்கும் என்றார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு, பிரதேச செயலர் சா.சுதர்சன் அவர்களால் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் ஆக்கங்களை உள்ளடக்கிய புதுப்பிரவாகம் நூல் வெளியிடப்பட்டதுடன், அது கண்பார்வையற்றவர்கள் வாசிக்கக் கூடிய வகையிலும் பிரெய்லி வடிவிலும், ஒலி வடிவிலும் வெளியீடு செய்யப்பட்டது.