சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய வங்கி முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் மறைந்த பிரபல தொழிலதிபர், சமூக சேவையாளர் அழகுசுந்தரம் கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். கோண்டாவிலில் அமைந்துள்ள BCI கல்லூரியில் இடம்பெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் அமரர் கிருபாகரனின் திருவுருவப்படத்திற்கு மூத்த நடிகர் மகேந்திரசிங்கம் மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து நடிகரும், திரைப்படத்தயாரிப்பாளருமான சபேசன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் கலந்து கொண்ட அனைவரும் மெழுகு தீபம் ஏற்றி, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் சினிமா கலைஞர்கள், அமரர் கிருபாகரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த நடிகரும், இளைப்பாறிய வங்கி முகாமையாளருமான மகேந்திரசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகர் சபேசன் கருத்து தெரிவிக்கையில், கிருபாகரனின் இழப்பு என்பது எமது சமூகத்தில் நிரப்பப்பட முடியாத வெற்றிடம். அந்த வெற்றிடத்தை ஈழ சினிமா கலைஞர்கள் நன்கு உணர்வார்கள். பல ஈழ சினிமா கலைஞர்களின் படைப்புக்கள் வெளிவருவதற்கு பெருந்துணையாக இருந்தவர் அவர். எனவே, நன்றி மறக்காமல் அஞ்சலிப்பது கலைஞர்கள் ஒவ்வொருவருடைய கடமை என குறிப்பிட்டார்.
நடிகர் ஜெராட் நோயல், நடிகர் இதயராஜ், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ரெஜி செல்வராசா உள்ளிட்ட கலைஞர்களும் அமரர் கிருபாகரன் தொடர்பிலான தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
அமரர் கிருபாகரன் முன்னெடுத்த சமூகப்பணிகளை அவர் நிறுவனம் சார்ந்தவர்கள் இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அது சமூகத்துக்கு பேருதவியாக இருக்கும் என்ற விண்ணப்பத்தை ஊடகவியலாளரும், சினிமா செயற்பாட்டாளருமான வரோதயன் முன்வைத்திருந்தார்.
இந்த அஞ்சலி நிகழ்வை ஈழ சினிமா கலைஞர்கள் சார்ந்து செயற்படும் குவியம் ஊடகமும் Betta College International உம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது












