வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வேளைகளில் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.