நாளை (14) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 10,000 உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக 2500 பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட செயலாளருமான திரு.நந்தன கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா – மஸ்கெலியா, வலப்பனை, ஹகுரன்கெத்த மற்றும் கொத்மலை ஆகிய தொகுதிகளுக்கு 605,292 வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் 20,502 பேர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளதாகவும் திரு.கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்துக்கான எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு 17 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 534 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா காமினி தேசிய பாடசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் 65 வாக்கு எண்ணும் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.நந்தன கலபட மேலும் தெரிவித்தார்.