யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் துவிச்சக்கரவண்டிக்கு மேலே விழுந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் (26-10-2024) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில், கேணியடி, ஆடியபாத வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 79 வயதான சின்னத்தம்பி சிறிராகுலன் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொது சுகாதார பரிசோதகரும் நேற்று டெங்கு ஒழிப்பு களத்தரிசிப்புக்காக குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றனர். இதன்போது குறித்த முதியவர் துவிச்சக்கரவண்டி மீது விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.