வடமாகாணத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றம் பெண் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பாராளுமன்றத்தில் பெண் பிறநித்துவம் குறைவடைந்து செல்கின்ற நிலையில் கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்து எந்த ஒரு பெண் வேட்பாளரும் பாராளுமன்றம் செல்லாதது துரதிஷ்டமான சம்பவம்.
ஏனெனில் வடக்கு கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு குரல் கொடுப்பதற்கு பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றத்தில் இல்லை.
ஆண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்தாலும் அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக பெண்கள் பிரச்சனைகளை கூறுவார்கள் அத்தோடு அவர்களின் நடவடிக்கை முடித்துவிடும்.
தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை ஆளுமை மிக்க பெண்களை சந்தர்ப்பம் வழங்குவது அருகி வரும் நிலை காணப்படுகிறது ஏன் இதை நான் கூறுகிறேன் என்றால் திறமையான பெண்களை நிறுத்தினால் பாராளுமன்றம் சென்று விடுவார்கள். அதே கட்சியில் போட்டியிடும் ஆண் வேட்பாளர்களுக்கு பாதகமாக அமைந்து விடும் எனச் சிந்திக்கிறார்கள்.
அவ்வாறான மனநிலையில் இருந்து கட்சிகள் மாற வேண்டும் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் தகுதியான திறமையான பெண்கள் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்குவார்கள்.
ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்ந்து பெண் பிரதிநிதி ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவதற்கு பெண்கள் முன்வருவதோடு ஆண்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.