இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் மழை நிலைமை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.