யாழ்ப்பாணம் அராலிப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேக நபர் நேற்றையதினம் (08-10-2024) காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர், வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து 7 இலட்சம் ரூபா பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.
இந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
இது தொடர்பில் சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, 42 வயதுடைய 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.