நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியால் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதுடன், குறித்த சம்பவத்தில் 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று உயிரிழந்த கணவன் மது போதையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, மனைவி கணவனின் வாயை துணியால் கட்ட முற்பட்ட போது கணவன் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மயக்கமடைந்த கணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது கணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மதுபோதையில் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், அயல்வர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.