ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் உயர் அரசியல் பீடத்தின் முக்கிய பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பிலான அனைத்து மட்ட அரசியல் நடவடிக்கைகளையும் கட்சி திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் தலைவர் என்ற வகையில் பொதுஜன பெரமுன கட்சியை பிரபலமான கட்சியாக கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கட்சியின் முக்கியஸ்தர்களை கேட்டுக் கொண்டார்.