ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய அதிகாரிகள் குழுவினால் நேற்று சனிக்கிழமை (13) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர்கள் சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், திருடப்பட்ட பெருமளவிலான கேபிள் துண்டுகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை, மொரட்டுவை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடியமை மற்றும் பல்வேறு வீடடைப்பு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை (13) பிற்பகல் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மொரட்டுவை பகுதியில் சுமார் 180,000 ரூபா பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள் கம்பிகளை திருடியுள்ளதுடன் பல வீடுகளினுள் புகுந்து பெறுமதியான சொத்துக்களையும் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பெருமளவிலான செப்பு கம்பிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










