பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் முசாஃபராபாத் நகருக்கு அருகே, பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான ‘எம்.ஐ-17’ (MI-17) ரக உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இராணுவப் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
எனினும், விபத்தின் போது உலங்கு வானூர்தியில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்ற விபரம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
குறித்த உலங்கு வானூர்தி ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகி, பிராந்திய தலைநகரான முசாஃபராபாத் அருகே விபத்துக்குள்ளானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக இராணுவ விசாரணைச் சபை (Board of Inquiry) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.










