மட்டக்களப்பு, சின்ன உப்போடை பகுதி வாவியில் நேற்று மாலை இரண்டு ஆண்களின் சடலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இருவரது சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை நேற்று மாலை 5 மணியளவில் கண்ட பொதுமக்கள், உடனடியாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தலைமையகப் பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார், நீரில் மூழ்கியிருந்த இரு ஆண்களின் சடலங்களையும் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. அவர்கள் தொடர்பான அடையாளங்களைக் கண்டறியும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று, சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று இரவு எடுக்கப்பட்டன.
இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












