புகழ்பெற்ற ‘டுபாய் 24 ஹவர்ஸ்’ சிற்றூந்து பந்தயத்தில் பங்கேற்று வரும் நடிகர் அஜித் குமார் அவர்களை, நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இச்சந்திப்பை பதிவு செய்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், தற்போது திரைப்படங்களிலிருந்து தற்காலிக இடைவேளை எடுத்துக்கொண்டு, சர்வதேச அளவிலான சிற்றூந்து பந்தயங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘Ajith Kumar Racing’ என்ற தனது சிற்றூந்து ரேஸ் குழுவுடன் இணைந்து, பல நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்று வருகின்றார்.
அஜித்துடன் ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ‘விசுவாசம்’ உள்ளிட்டவெற்றிப் படங்களில் இணைந்து நடித்த நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் டுபாய் சென்று அஜித்தின் சிற்றூந்து பந்தயத்தை நேரில் கண்டு ரசித்துள்ளார். பந்தயக் களத்தில் அஜித்தை சந்தித்த போது, அவர் இருவரையும் அன்புடன் வரவேற்று உரையாடினார்.
இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், பந்தயத்தின் போது அஜித் அணிந்திருந்த உடையில், ஒரு பிரபல குளிர்பான நிறுவனத்தின் ஆதரவுச் சின்னம் (Sponsor Logo) இடம்பெற்றிருந்தது.
திரையில் மது மற்றும் குளிர்பான விளம்பரங்களைத் தவிர்த்து வரும் அஜித், ரேஸ் உடையில் அத்தகைய சின்னத்துடன் தோன்றியது சமூக வலைத்தளங்களில் சில விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.எனினும், தனது இலக்கில் உறுதியாக இருந்து, சிற்றூந்து பந்தயத்தில் முழு தீவிரத்துடன் அஜித் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.









