கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் நேற்று மீண்டும் வெளியானது. இந்நிலையில் எஸ் ஆர் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றில் நாயகன் மீண்டும் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதாவது, தாங்கள் நாயகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருந்த போதும், வி.எஸ். பிலிம் இண்டர்நஷனல் நிறுவனம் முறைகேடாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படத்தை மீண்டும் வெளியீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் மீண்டும் வெளியீடு செய்யப்படுவதால் மீண்டும் வெளியாவதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி என்.செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.









