இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு நிறந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ் மக்கள் சொல்வதை நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று சனிக்கிழமை (26) மாலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கூட்டம் இடம் பெற்றது.
மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வடக்கு, கிழக்கில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கப் பெற்ற வாக்குகளை விட இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் கிடைத்தால் மட்டுமே நாங்கள் நாடாளுமன்றத்திலே தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகின்ற போது எமது உரைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
இந்த நாட்டிலே அரசியல் தீர்வு என்பது ஒரு முக்கியமான விடயம். நிறந்தரமான அரசியல் தீர்வு என்பது சமஸ்டி முறையில் கிடைக்க வேண்டும் என்பதை எமது கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருந்தார். இந்த நாட்டிலே எமது மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு இல்லாது விட்டால் இந்த நாட்டிலே எமக்கு நிரந்தரமாக வாழ்வு இல்லை என்பதையும் அவர் கூறியிருந்தார்.
இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு நிறந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ் மக்கள் சொல்வதை நாங்கள் மீண்டும் ஒரு முறை எடுத்துச் சொல்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு இன்று தென்னிலங்கையிலே என்.பி.பி அரசாங்கம் கூறிக்கொண்டு வருகின்ற விடயம் இலங்கை தமிழரசுக் கட்சியை குறி வைத்து இக் கட்சியை வடக்கு, கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று கூறுகின்றார்கள்..
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை கேட்கவில்லை என்று கூறுகிறார்கள். இன்று வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் என்.பி.பியினுடைய கவனம் கூடுதலாக செலுத்தப்படுகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வடக்கில் வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள். ஆசனங்களைப் பெற்று ருசி கண்டார்கள். கிழக்கு மாகாணத்தில் பாரிய அடி வாங்கினார்கள்.
என்.பி.பி.அரசாங்கத்தின் அபிவிருத்திகளுக்காக தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்றால் கடந்த 6 மாதங்களுக்குள் என்ன நடந்துள்ளது என்பதை மக்கள் சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதிகளை அவர்கள் கடந்த 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி உள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். கடந்த 6 மாதங்களுக்குள் மன்னாரில் என்ன நடந்துள்ளது என்று பார்க்க வேண்டும். மன்னாருக்கு வந்த ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது மன்னாருக்கு வருகை தந்து வழங்கிய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் அவர் மறந்து போய் விட்டார். பொய் செல்வதையே ஒரு தொழிலாக என்.பி.பி அரசு வைத்துள்ளது. தமிழ் மக்கள் மடையர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கலாம். அதை மாற்றி அமைப்பதற்கான ஒரு தேர்தலாக இத் தேர்தல் அமைய வேண்டும்என அவர் மேலும் தெரிவித்தார்.



