திருகோணமலை -சம்பூர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தினால் அனல் மின் நிலையத்துக்கு பெறப்பட்ட காணிகளை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் தற்போது பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கு தமக்குரிய காணிகளை வழங்குமாறும் சம்பூர் பிரதேச மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கருக்கும் மேலதிகமாக விவசாய காணிகளை கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சித்திர வேலாயுதம் தெரிவித்தார்.
கடற்படையினருக்கு 500 ஏக்கர் காணிகள் தேவைப்படாது எனவும் தமக்குத் தேவையான அளவை பெற்றுக் கொண்டு மிகுதியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த விவசாய காணி தொடர்பில் சம்பூர் 03ம் வட்டாரம் சித்திரவேல் கிருபை ராஜா இவ்வாறு தமது கருத்தினை வெளியிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 2006 ஆம் ஆண்டு தனது பிரதேசத்தை விட்டு வெளியேறிய போது இந்திய அரசாங்கத்திற்கு அனல் மின் நிலையம் அமைப்பதற்கு வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் மீண்டும் 2015 ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட போது மீண்டும் குறித்த காணிக்குள் செல்லும்போது அக்காணியை சுற்றி வேலி அமைத்து இருப்பதாகவும் மக்களுக்கு உரிய காணியை
பறித்து வேறு நாட்டவர்களுக்கு கொடுப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தங்களுடைய காணிகளை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் காணிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இம்முறை இந்த அரசாங்கத்தின் நம்பி நாங்கள் வாக்களித்து உள்ளோம். ஆகவே சம்பூர் மக்களுடைய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.
நான் ஒரு தமிழனாக இருந்தும் இம்முறை இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தது எங்களுடைய காணிகளை மீண்டும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சம்பூர் கடற்படை முகாம் அமைந்துள்ள இடமானது மக்களுக்குச் சொந்தமான இடம் எனவும் மக்கள் பாவிக்கக் கூடிய குளங்கள் இருப்பதுடன் மாடுகளை மேய்க்க கூடிய காடுகள் இருப்பதாகவும் தற்போது மாடுகளை கூட மேய்ப்பதற்கு இடமில்லை எனவும் சம்பூர் பிரதேசத்தில் உள்ள மற்றும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சம்பூர் வேயன் வெட்டான் என்ற இடத்தில் தோட்டம் செய்து வந்ததாகவும் சோளம், மரக்கறி பல்வேறுபட்ட மரக்கறி வகைகளை நாட்டி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்ததாகவும் தற்போதைய நிலையில் குறித்த காணிகளை வழங்காமல் இருப்பதினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இராசரெட்ணம் மோகன் தமது கவலையை வெளிப்படுத்தினார்.
2006 ஆம் ஆண்டு சொந்த காணியை விட்டு வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வருகை தந்த போது கடற்படையினர் தங்களுக்குச் சொந்தமான காணியை பிடித்து வைத்துள்ளதாகவும் இந்த அரசாங்கம் குறித்த காணியை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுகின்றனர்.
வீட்டுத் தோட்டங்களை செய்தால் தங்களது ஜீவனோபாயத்தை எவ்வித பிரச்சினையும் இன்றி முன்னெடுக்க முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசம் மிகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவநோபாயத்தை தங்களது முயற்சியினால் மேம்படுத்தி வந்தனர்.
450 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யக்கூடிய விவசாய நிலங்கள் தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பூர் பிரதேச அப்பாவி மக்களுடைய குறித்த விவசாய காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.



