பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், சிந்து நதி விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சிந்து நதியில் தண்ணீர் ஓடாவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என ஆணவமாக பேசியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அழகிய இடம் பஹல்காம். சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக உள்ள இந்த இடத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். இங்குள்ள இயற்கையான சூழல், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை சுற்றுலாப் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் வெறியாட்டம் நடத்தினர். சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எப் என்ற இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. தடை செய்யப்பட இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் அம்பலாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களுக்கு கற்பனை செய்யமுடியாத அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்தார். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளது.
ஆணவத்துடன் பேசிய பாகிஸ்தான முன்னாள் அமைச்சர்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், அதுமட்டும் இன்றி 80 சதவீத விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அந்த நாடு அலற தொடங்கியுள்ளது. இந்தியாவின் இந்த மரண அடியால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான் அடாவடியாக பேசி வருகிறது.
சிந்து நதி நீர் நிறுத்தப்படால் அதை போராகவே கருதுவோம் என்றும் பேசியிருந்தது. தனது வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது. தற்போது எல்லையிலும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் தக்க பதிலடியை அளித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி , ஆணவத்துடன் பேசியிருக்கிறார்.
ரத்தம் தான் ஓடும்
பாகிஸ்தானில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ பேசியதாவது:- “இந்தியாவுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிந்து நதி எங்களுடையது. அந்த நதி எங்களுடையதாகவே தொடர்ந்து இருக்கும். ஒன்று நமது தண்ணீர் அந்த நதியில் பாயும்.. இல்லையென்றால் அவர்களின் ரத்தம் ஓடும். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விட்ட இந்தியா, மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானை பலிகடா ஆக்குகிறது” என்றார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையில் அப்போதைய இந்திய பிரதமர் நேரு, பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான், உலக வங்கி சார்பில் இலிப் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் 6 ஆறுகளை பயன்படுத்துவது தொடர்பாக தீர்வு காணப்படது. மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய 3 ஆறுகளின் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆறுகளின் நீரை இந்தியா மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் மற்றும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.
கங்கை, யமுனையுடன் சேர்க்க வாய்ப்பு
கிழக்கு ஆறுகளான ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 ஆறுகளின் நீர் முழுவதையும் இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நதிகளில் இருந்து எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். சிந்து நதிநீர் அமலில் இருந்ததால், இந்த நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கும், நீரை எடுப்பதற்கும் இந்தியாவால் முடியாமல் போனது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இனி இந்தியா புதிய அணைகள் கட்டும், அதே போல் ஆற்றின் போக்கினை திசை திருப்பி அதனை கங்கை அல்லது யமுனையுடன் சேர்க்கவும் வாய்ப்பு உண்டாகி இருக்கிறது. இதனால், இந்தியாவில் நீர்வளம் செழிக்க வாய்ப்புள்ளது.