பொதுமக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார் உள்ளனர். அதனை பயன்படுத்தி அட்டூழியங்கள் செய்வதற்கு எந்தவித சமரசமும் கிடையாது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தீர்க்கப்படும் என்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
ஊழல் மோசடியற்ற உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கு அரச ஊழியர்கள் தமது ஆதரவை திசைகாட்டி சின்னத்திற்கு வழங்கவேண்டும்.
வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
அந்தவகையில் கடந்த காலங்களில் பொலிஸாரால் பல்வேறு முறைகேடுகள், துஷ் – பிரயோகங்கள் இடம்பெற்றது. எமது அரசாங்கம் வந்ததன் பின்னர் கனிசமான அளவு அவற்றை குறைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் முழுமையாக அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பொலிஸார் மீது பிழை இருப்பின் சரியான விசாரணையினை நடாத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் மீது பொலிஸார் வன்முறையை பிரயோகிக்கின்றனர் என அறியக்கூடிய விடயங்களை அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணிப்புரைகளை விடுத்துள்ளோம்.
எதிர்காலத்தில் இவ்வகையான செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். பொதுமக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார் உள்ளனர். அதனை பயன்படுத்தி அட்டூழியங்கள் செய்வதற்கு எந்தவித சமரசமும் கிடையாது. எனவே பொதுமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டால் ஆளும் கட்சி என்ற வகையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயங்கப்போவதில்லை.
கடந்த காலங்களில் இந்த உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் மீது வரியையும் வாடகையும் விதித்து அறவிடும் பணியை மாத்திரமே செய்தது. ஆனால் அறவிடப்பட்ட அந்த நிதியை உட்கட்டுமான அபிவிருத்திக்காக செலவழிக்காமல் நிலையானவைப்பில் மாத்திரமே வைக்கப்பட்டது. ஆனால் நாம் ஆட்சியமைக்கும் சபைகளில் மக்களின் பணத்தை மக்களின் தேவைகளுக்கும் அபிவிருத்திக்கும் வழங்குவோம்.
எனவே எதிர்வரும் தினங்களில் தபால் மூலமான வாக்குகளை அளிக்கவுள்ள அரச ஊழியர்கள் நன்கு சிந்தித்து உங்கள் வாக்கை திசைகாட்டி சின்னத்திற்கு வழங்க வேண்டும் என்றார்.