யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இன்றிரவு காரில் வவுனியா நோக்கி பயணித்தனர். இதன்போது மாங்குளம் பொலிஸார் அவர்களை வழிமறித்தனர்.
வழி மறிக்கும்போது டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சினர். இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் நிலைகுலைந்தனர். இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் இப்படி வெளிச்சத்தினை கண்களில் பாய்ச்சி வாகனங்களை மறிக்க கூடாது என எடுத்துரைத்தனர்.
இதன்போது குறிக்கிட்ட பொலிஸார் இளைஞர்களை மிரட்டும் வகையில், அப்படித்தான் செய்வோம், என்ன செய்ய முடியும் எனக் கூறினர். இதன்போது இளைஞர்கள் “பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவே இவ்வாறு வாகனங்களை டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சி மறிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்” என கூறினர்.
இதன்போது பொலிஸார் அவரது அறிவிப்பு குறித்து எமக்கு தெரியாது என்று கூறிவிட்டு சிங்களத்தில் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் இளைஞர்கள், எமக்கு சிங்களம் தெரியாது, தமிழில் பேசுங்கள் என கூறிய வேளை, “இது சிறீ லங்கா, நீங்கள் சிங்களம் பேசத்தான் வேண்டும், தமிழில் எல்லாம் பேச முடியாது” என்று மிரட்டினர்.
குறித்த பொலிஸார் மேல் அங்கியினை அணிந்திருந்த நிலையில் அவர்களது தகட்டு இலக்கம் மறைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உங்களது தகட்டு இலக்கத்தை கூறுங்கள், நாங்கள் இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களிடம் முறையிடுகின்றோம் என இளைஞர்கள் கூறினர்.
இதன்போது பொலிஸார் “நீங்கள் அவரிடம் கூறி எதுவும் செய்யப் போவது இல்லை. அவராலும் எதுவும் செய்ய முடியாது. தகட்டு இலக்கமும் வழங்க முடியாது என மிரட்டி அனுப்பினர். WP – BIK – 3102 என்ற மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸாரே இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் வந்த வாகனங்களையும் பொலிஸார் டோர்ச் லைட் ஒளி பாய்ச்சியே வழி மறித்தனர்.
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு காணப்படுறது. இது குறித்து செய்திகள் வெளியாகிய நிலையிலும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. எனவே உரிய அதிகாரிகள் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

