“யாழ்ப்பாணம் மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிப்பட்டமையால் சக தமிழ்த் தேசியக் கட்சிகளில் ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மேற்படி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளோம். எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பதை மிக விரைவில் அறிவிப்போம்.”என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் தமிழ் மக்கள் கூட்டணியாக ‘மான்’ சின்னத்தில் போட்டியிடுகின்றோம். அதில் குறிப்பாக நல்லூர் மற்றும் காரைநகர் பிரதேச சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஏனைய சபைகளிலும் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம்.
யாழ். மாநகர சபையில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையால், நாம் யாருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்பது தொடர்பில் மக்களுக்கு மிக விரைவில் அறிவிப்போம். சக தமிழ்த் தேசியக் கட்சிகளில் ஏதாவதொரு கட்சியுடன் புரிந்துணர்வுக்கு வரும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கு எமது ஆதரவை வழங்குவோம். அதற்காக அந்தக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளோம்.
தமிழ் மக்களை அன்புரிமையுடன் நாம் கேட்டுக்கொள்வது, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே வாக்களியுங்கள். ஜனநாயத்தைப் பாதுகாக்க தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என நாம் மக்களை வழிப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.