சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானின் விஷேட அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (22 ) முதல் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது இரு தரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இவ்விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையிலான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவு செய்யப்படும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு சவுதி அரேபியாவில் இந்தியர்கள் பணிபுரியும் தொழிற்சாலையொன்றுக்கு விஜயம் செய்யும் பிரதமர், தொழிலாளர்களுடனும் அளவளாவுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் பிரதமர் மோடிக்கும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், எரிசக்தி உறவுகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.