இந்த யுகத்தின் அடையாளமாக விளங்கிய பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (22.04) அனுப்பி வைத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு, உலக வாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்குள் தள்ளியுள்ளது.
உலக வாழ் கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த அவர், தனது திருச்சபை மக்களைக் கடந்து உலக வாழ் மக்கள் தொடர்பில் சிரத்தையும், மானிட நேசத்தையும் கொண்டிருந்தார்.
கருணையையும், மனித நேயத்தையும், சமாதானத்தையும் விரும்பிய இந்த யுகத்தின் அடையாளமாக திகழ்ந்த திருத்தந்தை எல்லா மக்களாலும் போறப்பட்டவராவார்.
உலகத் தலைவர்கள் சுற்றுச் சூழலையும், குழந்தைகளையும், முதியோர்களையும், துன்பத்தில் உழல்வோரையும் பாதுகாக்கக் கடமை கொண்டுள்ளார்கள் என்ற தூய சிந்தனையோடும் மனித நேயத்துடனும், பக்குவத்துடனும் செயலாற்றினார்.
மதங்களைக் கடந்த மனித நேயத்தின் அடையாளமாக, சமாதானத்தின் தூதுவனாக இறைபணி ஆற்றிய கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் மறைவிற்கு எனது மாவட்ட மக்கள் சார்பாகவும், எமது அரசாங்கம் சார்பாகவும், என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.