ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல் கருத்துக் கணிப்பில் தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், சற்று முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அல்பானீஸின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தற்போது ஆஸ்திரேலியா பார்லிமென்டிற்கு மே 3ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிகரிக்கும் பொருளாதார செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அல்பானீஸூக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா பிரதமர் அல்பான்ஸின் தொழிலாளர் கட்சி, எதிர்க்கட்சிகளை விட கொஞ்சம் முன்னிலை பெற்றிருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்கட்சியான லிபடர் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கும் எலான் மாஸ்க்கின் அரசாங்க திறன் துறையின் (DOGE) செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போன்று இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தேர்தலில் அவருக்கான ஆதரவு குறைந்துள்ளது.
அதாவது, அரசு ஊழியர்கள் முழு நேர ‘வேலைக்கு அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழக்கும் திட்டம் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த ஜனவரியில் டட்டனின் லிபரல் கட்சி கூட்டணி ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. தற்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரதமர் அல்பானீஸ் 9 புள்ளிகள் வரை கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்றுள்ளார்.
போஸ்டல் ஓட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டளிக்க தகுதியுள்ள ஆஸ்திரேலியர்களில் பாதி பேர் மே 3ம் தேதிக்கு முன்பாகவே ஓட்டளித்து விடுவார்கள் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகிறது.