வவுனியா புதிய பேருந்து நிலையத்தை மாநகரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதுடன் அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும் என்று ஜனநாயக தேசியகூட்டணியின் வவுனியா மாநகரசபையின் முதன்மை வேட்பாளர் ப.கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
வவுனியா புதிய பேருந்து நிலையமானது தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ளது.இருப்பினும் அங்கு பராமரிப்பு பணிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை. குறிப்பாக பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் சேதமடைந்துள்ளது. பொதுக்கழிப்பிடம் துர்நாற்றம் வீசுவதுடன் துப்பரவின்றி காணப்படுகின்றது. எனவே அதனை பொதுப்பயன்பாட்டிற்கு உகந்தவகையில் சீரமைப்பதற்கு மாநகரசபையின் கீழ் கொண்டுவரவேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது.
எமக்கு மக்கள் ஆணைவழங்கி ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டால் புதிய பேருந்து நிலையத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து விடுவித்து மாநகரசபையின் கீழ் கொண்டுவருவதற்கான முழு நடவடிக்கையினையும் எடுப்போம்.
அத்துடன் மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அண்மையில் வாகனத்தரிப்பிடம் ஒன்று இல்லாமை பாரிய பிரச்சனையாக உள்ளது.தூர பிரதேசங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் வீதிகளில் பாதுகாப்பின்றி தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் வீண் அலைச்சல் ஏற்ப்படுவதுடன் வாகனங்களும் திருடப்படும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு போதிய இடவசதி உள்ள பேருந்து நிலைய வளாகத்தின் ஒரு பகுதியில் மாநகரசபையின் அனுசரணையில் வாகனத்தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை நாம் நிச்சயம் எடுப்போம். எனவே மக்கள் எமக்கு ஆணை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.