1958 – இலங்கையில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே பண்டா – செல்வா ஒப்பந்தமாகும்.
தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது.
குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது.
ஒப்பந்த முறிவு
இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
1835
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1864
புருசிய – ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.
1880
மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.
1897
கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.
1902
குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1906
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1909
ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1912
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
1930
பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945
இரண்டாம் உலகப் போர் : ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1946
அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.
1949
அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954
ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955
29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய – ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.
1980
சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.
1983
லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1993
பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996
லெபனானில் ஐ.நா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007
பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.
2018
சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.
2021
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன்களைத் தாண்டியது.




