குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கான வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் தொலைபேசி மூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்பதால், அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார்.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சட்டத்தரணியாக உதய கம்மன்பில செயற்பட்டதால் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.