குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திகடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (14.04.2025) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் உள்ள கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த ஆலய தூக்குகாவடி நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பக பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொட்டுகிணற்று பிள்ளையார் ஆலயத்தை நோக்கி செல்ல இருந்த வேளை தூக்கு காவடி கட்டப்பட்ட உழவியந்திர பெட்டி கற்பக பிள்ளையார் ஆலய வளாகத்தில்
திடீரென குடைசாய்ந்ததனால் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து தூக்கு காவடி எடுத்த இரு இளைஞர்களும் விபத்தில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


