FAIR MED நிறுவனத்தின் முழுமையான அனுசரணையில் யாழ் வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை முள்ளியானில் சிறுவர்களுக்கான மகிழ்வகம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபனால் இன்று(11) திறந்து வைக்கப்பட்டது
வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகர் பிரபாகர மூர்த்தி தலைமையில் இன்று(11) முற்பகல் 10 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மகிழ்வகத்தின் பெயர்ப்பலகை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மகிழ்வக கட்டிடம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தியோகபூர்வமாக நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
முள்ளியான் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி நித்தியவெட்டை பகுதியை மையமாகக் கொண்டு இந்த மகிழ்வகம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முள்ளியான் கிராமங்களில் உள்ள சமூகத்தை குறிப்பாக குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்காக மகிழ்வகம் நிறுவப்பட்டது. அனைவரும் இதனை பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஒன்றை உருவாக்குவது நமது நோக்கமென FAIR MED நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வடமராட்சி கிழக்கு பிரதேசம் பின்தங்கிய பிரதேசம் என கருதாமல் இங்கு இருக்கின்ற சிறுவர்களை பாடசாலை முடிந்தவுடன் மகிழ்வகத்திற்கு கூட்டிக் கொண்டு வந்து வாழ்க்கையின் நுணுக்கங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுடன் எதிர்காலத்தில் அவர்களை ஒரு சிறந்த பிரஜையாக உருவாக்குவதற்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் இந்த மகிழ்வகம் உதவுமென தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது முள்ளியான் கிராம அமைப்புகளின் தலைவர்களால் முள்ளியான் பிரதேசங்களில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நிகழ்வின் ஒரு பகுதியாக மகிழ்வக வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், FAIR MED திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் நடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் கலந்து கொண்டதுடன் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு. பிரபாகர மூர்த்தி, வடமராட்சிகளுக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ரேவதி, FAIR MED நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர், முள்ளியான் கிராம சேவகர், முள்ளியான் அபிவிருத்தி உத்தியோகத்தர், பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர், சமர்த்தி உத்தியோகத்தர், முள்ளியான் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



