இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது. ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய ஆளணியாகத் திரண்டிருக்கிறார்கள் எனப் பெருந்தோட்ட, மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர், பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் எழுத்தூர் பகுதியில் நேற்றைய தினம் (10) வியாழன் மாலை தேசிய மக்கள் சக்தி கட்சியின் வட்டார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டிலே பாரிய ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சியதிகாரம் தம்மை உயர்ந்த வர்க்கம் என்று கூறிக் கொள்பவர்கள் இடம் தான் இருந்தது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மூவின மக்களும் இணைந்து சாதாரண மக்களிடம் இந்த ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஒரு விவசாயியின் மகன் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச உட்பட தனிப்பட்ட ரீதியாக எந்த அரசியல்வாதிகள் மீதும் எங்களுக்கு கோபம் கிடையாது. அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த நாட்டின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
மக்களின் பணத்தில் தங்களுக்குச் சொத்துக்கள் குவித்தார்கள். கொலைக் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள். சாட்சிகளை அழித்தார்கள். ஆனால் இன்று எங்களுடைய ஆட்சியில் தான் எல்லாவிதமான குற்றச் செயல்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே மிக விரைவில் அநீதியில் ஈடுபட்டவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள். தேசிய மக்கள் சக்தி மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது. மக்கள் எதிர்பார்த்த உண்மையான மாற்றத்தையும் ஆட்சியையும் மக்களுக்கு நிச்சயமாக வழங்குவோம் என்றார்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மன்னார் நகர சபை வேட்பாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




