தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன இதனையடுத்து, மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை (10) உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், இன்று கொழும்பு உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.