முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை முடியுமானால் கைது செய்து பாருங்கள் என்று புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த அரசு ரணில் விக்ரமசிங்கவின் ஒரு முடியையேனும் அசைக்கப் போவதில்லை. பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தாலும் இதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை.
திமிங்கிலங்களை விட்டுவிட்டு நெத்தலி மீன்களையே இந்த அரசு பிடிக்கின்றது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் நான் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். மற்றையவர்களான பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் மேர்வின் சில்வா ஆகியோர் தோல்வியடைந்தவர்கள். அவர்களை விடுத்து வேறு அதிகாரம் கொண்ட எவரையும் கைது செய்ய முடியவில்லை.
இப்போது பட்டலந்த தொடர்பில் கதைக்கின்றனர். பதுளை பொரலந்தலவிலும் முகாமொன்று இருந்தது. அங்கு இருந்த ஆட்காட்டும் தலையாட்டி பொம்மை யார்? இந்த அரசின் அமைச்சரே இருந்துள்ளார். பெரும் சித்திரவதைகளைச் செய்த முகாமாகும். அங்கு இருந்த தலையாட்டி பொம்மை தற்போது அரசில் இருக்கின்றது.
அத்துடன் வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணப் பொதி தொடர்பில் கூறினர். அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தப் பொதியைக் காணவில்லை. மக்களை ஏமாற்றுகின்றனர். தேர்தல் அறிவிக்கப்படும் எனத் தெரிந்தே அரசு இவ்வாறு செயற்பட்டது. புத்தாண்டு முடிந்த பின்னர் அந்த நிவாரணப் பொதி மீண்டும் வழங்கப்படுவதில்லை. மீண்டும் மாகாண சபைத் தேர்தல் நெருங்கும்போது நிவாரணப் பொதி வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு என்ன நடந்துள்ளது என எங்களுக்கே தெரியும். பட்டலந்தவால் நீங்களே பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக்கொண்டுள்ளீர்கள். இந்த அரசால் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரை ஒன்றும் செய்ய முடியாது. முடியுமானால் கைது செய்து பாருங்கள்.
இந்த அரசு மக்கள் விடுதலை முன்னணியுடையது என்பதனை மறந்து அந்தக் கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை மறந்து புதிய பயணத்தையே மேற்கொள்கின்றது. இப்போது அமெரிக்கா வரி அதிகரிப்பைச் செய்தது. பின்னர் 90 நாட்களுக்கு அதனை இடைநிறுத்தியுள்ளது. மக்களின் அதிர்ஷ்டத்தால் இவ்வாறு அதனை ட்ரம்ப் இடைநிறுத்தியுள்ளார். இல்லையென்றால் நிலைமைகளைப் பார்த்திருக்கலாம். இவர்களால் எதுவும் முடியாது.” – என்றார்.