வவுனியாவில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை பொலிசார் விரட்டிப் பிடித்துள்ளதுடன், அதில் இருந்த இருவர் வாகனத்தை கைவிட்டு ஓடிச் சென்றுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (10.04) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசன்குளம் பொலிசார் காலை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ் வீதி வழியாக வவுனியா நோக்கி வந்த பிக்கப் ரக வாகனம் ஒன்று நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து குறித்த வாகனத்தைப் பூவரசன்குளம் பொலிசார் விரட்டிச் சென்றனர். இதன்போது குறித்த வாகனம் வவுனியா, விநாயகபுரம் பகுதியில் வேகமாக சென்று கொண்டு இருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்துக்குளானதும், அதன் சாரதியும் அதில் இருந்த மற்றைய நபரும் தப்பி ஓடிய நிலையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் குறித்த வாகனம் பொலிசாரால் கைப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி மற்றும் அதில் பயணித்தவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பூவரசன்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

