2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு (09) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலரின் வகிபாகம், நியமனம் கிடைத்த பின் பூர்வாங்க தயார்படுத்தல், வாக்கெடுப்பு தினத்திற்கு முன்னைய நாள் கடமைகள், வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்கெண்ணலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல், வாக்களிப்பு நிலையமொன்றின் அமைப்பு, முன்கூட்டியே பூரணப்படுத்த வேண்டிய படிவங்கள், வாக்கெடுப்பு தின நடவடிக்கைகள், வாக்களிப்பு நிலைய முகவர்கள், சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலரின் முத்திரை, இரகசியத்தை பற்றிய உறுதியுரை, வாக்கெடுப்புக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், வாக்கெடுப்பு நிலையத்தில் ஏனைய எழுதுநர்களின் நடவடிக்கைகள், வாக்களிப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அடையாள அட்டைகள், தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவதானிக்க வேண்டிய விடயங்கள், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது அதனை சூழவுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட நடத்தைகள், வாக்கெடுப்பை முடிவுறுத்தல், வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டியை பொறியிடும் முறை, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலரின் Z அறிக்கை, வாக்கெண்ணலின் ஆரம்ப நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ். சுதாகரன் மற்றும் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டப்பட்டன.
இச்செயலமர்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் மற்றும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



