மலரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகள் இன்று காலை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், அங்காடி வியாபாரிகள் என நூற்றுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளையும், பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வீ.விக்னேஸ்வரனின் பணிபுரையின் வழிகாட்டலில் திணைக்கள அதிகாரிகள் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாவனைக்குதவாக தராசுகள், முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகள் போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்தமை, நிறை குறைவாக விற்பனை செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரில் நான்கு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வர்த்தக நிலையங்களில் இருந்து நிறுத்தல், அளத்தல் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்
தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



