வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நுழைந்தபோது வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பதுளையைச் சேர்ந்த சத்சர நிமேஷ் எனும் இளைஞன் உயிரிழந்தார். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கடமைகளை புறக்கணித்தமைக்காக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் (01.04.2025) அன்று இரவு நுழைந்தபோது வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பதுளையைச் சேர்ந்த சத்சர நிமேஷ் எனும் இளைஞன் உயிரிழந்தார்.
இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில், உயிரிழந்த சந்தேகநபர், மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாகவும், பொலிஸ் நிலையத்தில் வைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்துக் கொண்டுள்ளதுடன், அதிகாரிகளால் அவரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அறைச் சுவரில் பல தடவை உடலை மோதிக் தன்னை தானே வருத்திக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் சந்தேகநபரான இளைஞனை அங்கொடை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எவ்வாறெனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சந்தேகநபர் மறுநாள் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையை முன்னெடுப்பதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரைகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக நேற்று பதில் பொலிஸ் மா அதிபரால், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்தோடு இச்சம்பவத்தில் கடமைகளை புறக்கணித்துள்ளதாக விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரையும் பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.