கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51மில்லியன் ரூபாவினை மட்டுமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு, மகிழுர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிதிகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுகள் அறிகம் செய்து வைக்கப்பட்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








