1987 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இலங்கை பிணைக்கப்பட்டுள்ளது என்பதோடு,
இது தமிழ் மக்களின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்ற வகையில்,
இந்த ஒப்பந்தத்தின் மையமானது இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய 13 வது திருத்தத்தை அறிமுகப்படுத்தியது, இது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க உறுதியளிப்பதோடு தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த வடக்கு மற்றும் கிழக்கை தமிழர்களின் தாயகப்பிரதேசமாக அங்கீகரிக்கின்றது.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு நான்கு தசாப்தங்களுக்குப் பின்னரும், இந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேறவில்லை.
மாகாண சபைகள் நிறுவப்பட்ட போதிலும், சிங்கள பெளத்த தேசியவாதத்தால் இயக்கப்படும் அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் தமிழர்களுக்கு உண்மையான அதிகாரத்தை வழங்கவில்லை மாகாண சபையின் அர்த்தமுள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அதற்கான தேர்தல்களும் தாமதமாக்கப்பட்டோ அல்லது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில்,
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களின் கலாச்சார அடையாளத்தை மாற்றுவதற்கான ஆக்கிரமிப்பு உந்துதலை மேற்கொண்டு, அரசு ஆதரவுடன் சிங்கள குடியேற்றங்களை தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஏற்படுத்தி
அங்கே பெளத்த விகாரைகளை நிறுவி தமிழர் இருப்பு மற்றும் வரலாற்றை அழிப்பதற்கான ஒரு பரந்த முயற்சிகள் தொடர்கின்றன.
இந்த தொடர் நடவடிக்கைகள், பெளத்த மதகுருமார்களினாலும் மற்றும் சிங்களப் பேரினவாதிகளினாலும் ஆதரிக்கப்படுகின்றன என்பதோடு, சிங்கள பெளத்த ஆதிக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியை இந்த நடவடிக்கைகள்பிரதிபலிக்கின்றது.
2009 ல் உள்நாட்டுப் போரின் துயரகரமான முடிவுக்குப் பின்னரும், தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் கடந்த காலத்தை கணக்கிடத் தவறி நல்லிணக்கத்தை புறக்கணித்ததோடு, தமிழ் மக்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைகளுக்கான குரலையும் , காணி நில அதிகாரங்களையும் தொடர்ந்து மறுக்கிறது.
இதற்கு துணையாக சிங்கள பெளத்த சமூகத்தில் மதிக்கப்படுகின்ற மகாநாயக்க தேரர்களும் கூட, பல சமயங்களில் இந்த சூழல் உருவாக காரணமாகி பிளவுகளைத் தூண்டுகின்றனர்.
அதனைப் போல இன்றைய இலங்கை அரசாங்கமும் வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகாரம் அளிக்க ஒப்புக்கொண்ட மாகாண சபை அமைப்பை புறக்கணித்து அமைதியாக உள்ளது. 13 வது திருத்தத்தை செயல்படுத்த மறுக்கின்றது என்றாலும்
ஏற்கனவே நடைபெற்று தற்போதும் இருப்பிலிருக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிராகாரம் அந்த ஒப்பந்ததை நடைமுறைப் படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பை இந்தியா, கொண்டுள்ளது என்ற வகையில்,
இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அரச அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், ஏற்கனவே உள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதே சாலச்சிறந்தது.
அத்தோடு இலங்கை அரசாங்கமும் இந்த யதார்த்தங்களை புறக்கணிப்பது என்பது அநியாயமானது என்பதோடு குறிப்பாக 2009 ஆம் ஆண்டின் சோகத்திற்குப் பிறகும் இத்தகைய புறக்கணிப்பு நியாயம் அற்றது மட்டுமல்லாது எதிர்காலத்தில் இது இலங்கை என்ற நாட்டுக்கும் ஆபத்தானது.
ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் அல்லாது அனைத்து சமூகங்களின் உரிமைகளுக்கும் கெளரவங்களுக்கும் மதிப்பளித்து அவர்களின் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் சமஷ்டி அதிகாரம் வழங்கும்போதுதான் இலங்கையில் உண்மையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை சாத்தியமாகும் என்பதே யதார்த்தம் ஆகும்.
தொகுப்பு- சுவாமி சங்கரானந்தா
