இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோறளைப்பற்று மேற்று, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை நாமே தீர்மானிப்போம் என பதுரியா மாஞ்சோலை வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியைத்தீர்மானிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.
தமது கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் சமூக சிந்தனையுள்ள இளம் வேட்பாளர்கள். தேர்தல் ஆணைக்குழுவின் நிபந்தனைகளுக்கமைய வேட்புமனுப்பத்திரம் அங்கீகரிக்கப்படுவதாயின், இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் களமிறக்கப்பட்ட டம்மி வேட்பாளர்களல்ல.
எமது வேட்பாளர்கள் அனைவரும் உற்சாகத்தோடு மக்களைத்தொடர்ந்தும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முடிவுகள் சிலருடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வீழ்ந்து கிடந்த எமது நாட்டை மீண்டும் தன்னந்தனியனாக சவாலை எதிர்கொண்டு இந்த நாட்டில் வரலாறு காணாத பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார்.
அது போலவே, எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரும் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி பிரதானியுமான அலிசாகிர் மௌலானாவினால் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
எமது பிரதேசத்தில் பாடசாலைகள், பள்ளிவாயல்கள் என அனைத்து துறைசார்ந்த அரச, அரச சார்பற்ற பொது அமைப்புகளுக்கும் அவர் நிதியொதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்து அபிவிருத்தியடையச் செய்திருக்கிறார் என்பதுஎவராலும் மறக்க முடியாத உண்மையாகும்.
அந்த வகையில், ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களித்து எம்மை வெற்றி பெறச்செய்யுமாறு மக்களிடம் மிக அன்பாய்க் கேட்டுக்கொள்கிறோம் எனக்கேட்டுக் கொண்டுள்ளார்.