உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைப்பாட்டில் இருந்து மக்களை மீட்டுகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தலை மாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தம்பலகாமம் பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர் எச்.தாலிப் அலியின் இல்லத்தில் நேற்று (05) மாலை இடம் பெற்றது
இதில் கலந்து கொண்டு ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்களுக்கு சென்ற காலங்களில் அளித்த வாக்கை அவர்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றதா? என்ற கேள்வியை சுமந்தவர்களாக இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக இன்று இனவாதங்கள் பேசப்படுகின்ற சில விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம். அந்த அடிப்படையில், என்னென்ன விடயங்களை சொல்லி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் அந்தந்த செயற்பாடுகளில் இருந்து மாறாக நடந்து கொள்கின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. அந்த அடிப்படையில் இன்று பல விடயங்கள் ஏமாற்று தனமாக காணப்படுகிறது.
குறிப்பாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லீம் மக்களுடைய உறவை கூட விமர்சிக்கின்ற அல்லது விரிசலை ஏற்படுத்தும் அரசியல் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். எதிர்பார்த்த மற்றும் சரியாக அமையாத காரணத்தினால் இந்த உள்ளூராட்சி மன்றத்தின் மூலமாக மீண்டும் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதே போன்று சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கூட சில கட்சிகள் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் ஒற்றுமையோடு பயணிக்கின்ற சூழலை கட்சி ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் அடிப்படையில் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தம்பலகாம பிரதேச சபை ஆட்சி அதிகாரத்தை பெரும்பான்மையாக கொண்டு கைப்பற்றும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி இருக்கும் என்பதை ஆணித்தனமாக கூறுகின்றேன். இந்த இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கத்தை நம்பி வாக்களித்த தமிழ், முஸ்லீம், சிங்கள இனவாதத்தை வெறுத்து ஆதரவளித்தவர்களுக்கு அரசாங்கம் இன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
எனவே மீண்டும் ஒரு நல் உறவை ஏற்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் பொய் பிரச்சாரத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்காமல் உங்கள் பிரதேச சபைகளில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்ற உறுப்பினர்களை உள்வாங்கி உண்மை, நேர்மை, நீதி, நியாயம் போன்றவற்றுடன் செயற்படும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள் என்றார்.