அஷ்ரபா நூர்தீனுடைய இரண்டாவது படைப்பாகவே “ஹிருலீன்கள்” என்ற இந்த கவிதை நூல் வெளியீடு கண்டுள்ளது. மகுடம் இலக்கிய வட்டத்தினால் வெளியீடு கண்ட
தனது நூலின் என்னுரையில் இறைவனுக்கே எல்லா புகழும் என்றே தொடங்குகிறார் நூர்தீன்.
பெண் விடுதலை
வன்கொடுமை
போர்
பலாத்காரம்
சமூக மாற்றம்
சமூக விடுதலை
போன்ற பல விடயங்களில் மாற்றத்தினையும் சமத்துவமான மகிழ்வினையும் எதிர்பார்க்கும் புதுமை பெண்ணாகவே அனைத்து கவிதைகளும் இவரை வெளிக்காட்டுகிறது.
வீதி மீறல் என்ற தலைப்பில்
“கரு நாக காப்பெட் சாலை
குருதி தாகமெடுக்கும் எமனாய்
நீண்டு வளைந்து உயர்ந்து தாழ்ந்து
என்னமாய் படுத்து கிடக்கிறது “
“காற்றை கிழித்து முதுகில் பறக்கும்
ஊர்திக்காரர்களுக்கு
மரணத்தின் அவசரம்
மொபைல் செருகிப் பேசி
பாடலில் லயிக்கும் பயணம்
முச்சந்திகளில் முட்டிக் கொண்டிருக்கும்
ஓட்டுனர்களின் வீரத்தை கணத்தில்
வீசி எரிகிறது வீதியும் வீதி மீறலும் “
படைப்பு என்ற தலைப்பில்
“மனிதனையும் இயற்கையையும் அழிக்கும்
முளையை கொண்டவனே
பறந்து சென்று பற்றி எரிய வைக்கும்
தீச் சுவாலைகளை மகிழ்வுடன் எய்பவனே
புதிய ஒரு பூமியையே
அதில் மலைகளையோ சமுத்திரங்களையோ
உருவாக்க உன் விஞ்ஞானத்தின்
ஆற்றலில் ஏதேனும் விடை இருக்கிறதா?
இருக்காது
ஏனெனில் நீயும் ஒரு படைக்கப்பட்ட மானுடன் “
குரல் என்ற தலைப்பில்
“எல்லா குரல்களுக்கும்
ஒரு தேவை இருக்கிறது
தேவை முடியும் வரை
அவை நம்மை துரத்துகின்றன
பல குரல்கள் தம் பொழுதை போக்கவும்
பல குரல்கள் தம் வாழ்வை இழக்கவும்
புனிதம் போர்த்திச் செயற்படுகின்றன “
இவரது பல கவிதைகள் பல உயரத்துக்கு பீச்சி நகரத்துகிறது. சமூக, உலக, இயற்கை நெறிமுறைகள் பலவற்றை எண்ணிய படி எண்ண துணிந்த இவரது கரங்கள் பேனாவை ஆயுதமாக்கியுள்ளது. பேனா ஏந்துகின்ற விரல்கள் வீழ்ச்சியை ஒரு போதும் கண்டதில்லை.
மாற்றம் ஒன்றே என்றுமே மாறாதது என்பதை நிதர்சனமாக்கவே இவரது கவிதைகள் நீள்கிறது. கண்முன்னே நடந்தேறும் சிறியது முதல் பெரியது வரையிலான அவலங்களை எழுத்தாணி பதித்திருக்கிறது என்பதை அஷ்ரபா நூர்தீனுடைய “ஹீருலீன்கள்” நூல் (ரூபா. 600) அம்பலம் செய்கிறது.
உங்கள் எழுத்துக்கள் என்றும் மாற்றத்தினை நோக்கி தொடரட்டும்…
எழுத்தாளர்
விமர்சகர்
ஆதன் குணா.

