2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான தமிழ் மொழி பேசும் அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள திணைக்கள தலைவர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பொலிஸ், மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெறும்.
இதன்போது அஞ்சல் மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள், காப்புறுதிப்பொதிகள், D உறையின் முன்பக்கம் மற்றும் பின் பக்கம், அடையாளமிடுதல், பிரச்சினைகள், அவதானிக்க வேண்டிய விடயங்கள், இரகசியம் வெளிப்படுத்தல் படிவம், ஒழுங்குமுறை, காணக்கூடிய குறைபாடுகள், அடையாளம் வெளிப்படுத்துகை படிவம், மாதிரி வாக்கு சீட்டு, B உறை – அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டினை வைக்கும் உறை, ஆளடையாள வெளிப்படுத்துகை, A உறை – அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் அடையாளம் வெளிப்படுத்துகை ஆகியவற்றினை தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பும் உறை, தபால் நிலையத்தில் கையளித்த பின்னர் செய்ய வேண்டியவை, குறிப்பேட்டினை பாரமளித்தல், விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், குறிப்பேடு போன்ற பல விடயங்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டப்பட்டன.