யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து நபர் ஒருவர் தொழில் புரிந்துவருவதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த 2024ம் ஆண்டு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைப் பகுதிக்குள் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்டு பொதுச்சபையாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆயினும் பொதுச்சபையினதும், நீரியல்வளத் திணைக்களத்தினதும் சட்டதிட்டங்களை மீறி அப்பகுதியில் நபர் ஒருவர் அடாத்தாக உழவு இயந்திரத்தை பாவித்து தொடர்ந்து கரைவலை தொழில் புரிந்துவருவது மீனவர்கள் இடையே முறுகல் நிலையை உண்டுபண்ணி வருகின்றது.
பொதுச்சபையின் தீர்மானத்தை மீறி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமான முறையில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்காக நீரியல் வளத்திணைக்கள அதிகாரிக்கு கடிதம் எழுதியது அம்பலமாகியுள்ளது.
செயற்பாட்டில் இருந்த ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து விலகிச் சென்றதால் கடந்த பொதுச்சபை கூட்ட தீர்மானத்தில் செயலாளர் ஒருவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் காலமாக இருப்பதால் தேர்தல் முடியும் வரை தற்பொழுது தெரிவு செய்யப்பட்ட செயலாளருக்கு படகு பதிவு செய்தல், படகு விற்பனை, அங்கத்தவர்களுக்கு வங்கி கணக்கு பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு கடிதம் வழங்கவே பொதுச்சபையால் அனுமதிக்கப்பட்டது.
ஆயினும் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மிக இரகசியமான முறையில் மீனவர்களின் தீர்மானத்தை மீறி உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி நீரியல்வளத் திணைக்களத்திற்கும், பாதுகாப்பு கோரி மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினரின் அண்மைக்கால செயற்பாடுகள் தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் நிர்வாகம் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மீனவர்களின் தீர்மானத்தை மீறி இரகசியமான முறையில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்திற்கு அனுமதி கோரி கடிதம் எழுதிய ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர், தலைவர் ஆகியோர் மீனவர்கள் இடையே இடம்பெறும் முறுகல் நிலைக்கு பொறுப்பென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.








