வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை ஆளுகைகுட்பட்ட பிரதேசத்தில் பண்டிகைக் காலத்தில் பொது வழிக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை காட்சிக்கு வைக்கப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் நெல்லியடி நகர மையப்பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பொதுவழிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை காட்சிப்படுத்துகின்ற போது வீதியின் ஓரமாக நடந்து செல்லும் பொதுமக்களின் சுயாதீனமான நடமாட்டங்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமையை தடுக்கும் நோக்கில் சபையின் உத்தியோகத்தர்கள் செயற்படுகின்ற போது அவர்களின் கடமைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன.
எனினும் வீதி அபிருத்தி அதிகார சபையிடம் சில வர்த்தகர்கள் கடந்த பண்டிகைக் காலத்தில் கட்டணம் செலுத்தியமையால் இவ் விடயங்களில் மக்களுக்கு பொதுப் பாதைகளில் ஏற்பட்ட தொல்லைகளை பிரதேச சபையால் தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டன. தற்போது வீதி அதிகார சபை பாராமரிப்பிலுள்ள வீதிகளில் வியாபாரம் செய்வதற்கு கட்டணங்களை வர்த்தகர்களிடமிருந்து அறவீடு செய்வதற்கு முன்னராக பிரதேச சபையின் சிபார்சினை பெற்று வர்த்தகர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு பிரதேச சபையால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையானது பிரதேச சபையின் சிபார்சுகளை பெற்று வருமாறு பருத்தித்துறை வீதியில் தொல்லைகளை ஏற்படுத்த முனைபவர்களுக்கு (வர்த்தகர்களுக்கு) அறிவுறுத்தி வருகின்றார்கள்.
பிரதேச சபையானது 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 65(3) பிரிவுக்கு அமைவாக சட்டவிரோதமாக வீதிக்கு தொல்லை ஏற்படும் வகையில் பொருட்களை காட்சிப்படுத்துகின்ற வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்களை எழுத்து மூலமாக வழங்கி வருகின்றார்கள். உடனடியாக பொது வழித் தொல்லைகளை அகற்றுவதற்கு உடன்படாத வர்த்தகர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் நெல்லியடி நகரப் பகுதியில் பொதுமக்கள் நெருக்கடியின்றியும் தமிழ் புத்தாண்டுக்கான பொருட்களை இடையூறின்றியும் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக பொது வழித் தொல்லைகளை அகற்றுவதே மிக பிரதான கடமையாக உள்ளதாகவும் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். இச் செயற்பாடுகளுக்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சபையின் செயலாளர் கோருகின்றார்.
