மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போஷாக்குள்ள உணவு வேளையை மலிவு விலையில் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவும் அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் இன்று (01) நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய உணவு மேம்பாட்டு சபையின் ‘பெலஸ்ஸ’ உணவகத்தில் செயல்படுத்தப்பட்டது.
தேசிய உணவு மேம்பாட்டு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவை இணைந்து, தற்போது உணவகங்களை நடத்தி வரும் தொழில்முனைவோரின் ஒத்துழைப்புடன், ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டத்துடன் ஒருங்கிணைத்து இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
இதன்படி, 200 ரூபாய் போன்ற குறைந்த விலையில் போஷாக்குள்ள நிறைவான விசேட உணவு வேளையை மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போஷாக்குள்ள சமச்சீரான உணவு வேளையை உள்ளடக்கிய சமையல் குறிப்பு, எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் உணவகங்கள் அனைத்திற்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பொதியிடப்பட்ட உள்ளூர் உணவு வகைகள் மற்றும் போஷாக்குள்ள குறுகிய உணவு வகைகளையும் மலிவு விலையில் மக்கள் பெறுவதற்கு இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த பங்கேற்றார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், “மக்களுக்கு தரமான, சுகாதாரமான மற்றும் போதுமான உணவு வேளையை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவது அவசியமானது. அதற்காக வழிகாட்டுதல் மற்றும் வணிக சமூகத்தில் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டத்துடன் ஒருங்கிணைத்து இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.