இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டு இயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாது என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இந்தியா மீனவர் பிரச்சனை தொடர்பில் பேசுவதற்காக இந்தியாவிலிருந்து ஒரு குழுவினர் வருகை தந்தனர்.
இந்தக் குழுவினர் கடற்தொழில் இல்லாத மாவட்டத்தில் இலங்கை மீனவ சங்கப் பிரதிநிதிகள் என கூறிக் கொள்ளும் தென் இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பின் அங்கத்தவர்களை வவுனியாவில் சந்தித்தார்கள்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவதாயின் சங்கங்கள் இருக்கிறது, சமாசங்கள் இருக்கிறது, சம்மேளனம் இருக்கிறது, கிராமிய அமைப்புகள் இருக்கிறது, அதை தாண்டி நீரியல் வளத் திணைக்களம் அமைச்சு என உத்தியோகபூர்வ பொறுப்பு கூற வேண்டியவர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்க வேண்டும்.
அவ்வாறு கலந்துரையாடாமல் தெற்கு அமைப்பில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை அங்கத்தவர்கள் எனக்கூறி அவர்களுடன் கலந்துரையாடி மீனவ சமூகத்தின் பிரச்சனையை தீர்க்க முடியாது.
இந்தியா இழுவைப் படகுகளினால் எமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வரும் நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதே எமது விருப்பம்.
அதை விடுத்து இந்திய மீனவர்களையும் வடபகுதி மீனவர்களையும் ஏமாற்றும் முகமாக வவுனியாவில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இலங்கை அரசாங்கத்திற்கு செய்தி ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி எமது கடற் பரப்புப்புக்குள் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்து சட்டத்தை முன் நிறுத்துங்கள் அவர்களின் படகுகளை அரசுடைமையாக்குங்கள்.
இந்த நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டு வருகின்ற நிலையில் அதனை நாம் மீனவர்கள் சார்பில் வரவேற்கிறோம்.
பதிவு செய்யப்படாத அமைப்புக்களுடன் இந்திய மீனவக் குழுக்கள் பேசுவதோ அல்லது ஒரு தீர்மானத்தை எடுப்பதோ அதை மீனவ சமூகத்தின் தீர்மானமாக அமையாது.
இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் கூறிக்கொள்ளுறோம் எமது கடல் வளத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடியுங்கள் எமது மீனவ சமூகம் ஆதரவாக நிற்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.