புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான எதிர்காலம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன.
ஆனால் இந்த ஆறு மாதங்களில் சொன்னவை ஏதும் செய்யப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ஊடக செயலாளர் ஸ்ரீகாந் மேலும் கூறுகையில்,
“முடிவுற்ற ஆறு மாத காலத்தில் ஜே.வி.பி. அரசாங்கத்தினால் ஒரேயொரு மாற்றமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்த மாற்றம் என்பது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கேலிக்கூத்தாக மாற்றியிருப்பதுதான். அந்த மாற்றம். இதனை கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்கூட நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்திலே அரசியல் அறத்திற்கு முரணான வகையிலே அந்தக் கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது. இருந்தாலும் குறித்த கூட்டங்களில் இடம்பெற்ற கேலிக் கூத்துக்களும், சபை நாகரீகமற்ற கருத்தாடல்களும், கூட்டத்தை கையாளும் திராணியற்ற தலைமைத்துவமும், அந்தக் கூட்டங்களிலே கலந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் மத்தியிலும், அரச அதிகாரிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும்கூட, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்டங்களையும் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் நேர்த்தியான தலைமைத்துவ பண்புகளையும் பேசு பொருளாக மாற்றியிருக்கிறது.
அது ஒருபுறமிருக்க, தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எவையுமே நிறைவேற்றப்படவில்லை. Clean srikanka என்றார்கள், வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கிற தேவையற்ற ஆணிகளை பிடுங்கி எறிவதுதான் கிளீன் ஸ்ரீலங்காவின் அடிப்படை என்றார்கள்.அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டதும் அதனை கிடப்பில் போட்டு விட்டார்கள்.
ஆட்சிக்கு வந்து சில நாட்களுக்குள் பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்ட அர்ஜின் மகேந்திரனை நாட்டுக்கு பிடித்து இழுத்து வருவோம் என்றார்கள். இப்போது அவர் இன்னுமொரு நாட்டின் பிரஜை என்ற படியால் நினைத்த வேகத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்கிறார்கள்.
பார் பெமிட் இலஞ்சமாக பெற்றவர்களின் விபரங்களை வெளியிடுவோம் என்றார்கள் இப்போது அவை சட்ட ரீதியாகவே வழங்கப்பட்டுள்ளன என்கின்றனர்.
பயங்கரவாதத் தடை சட்டம் நீக்கப்படும் என்றனர் இப்போது நீக்கப்பட முடியாது என்கின்றனர். மக்கள் காணிகளை விடுவிப்போம் என்றவர் அதுபற்றி இப்போது வாய் திறப்பதே இல்லை.
இவ்வாறு சொல்லப்பட்ட நீண்ட பட்டியல் ஒன்றே இருக்கின்றது. இந்த ஆட்சியாளர்களுடைய இயலாமைகளை, ஏமாற்றங்களை தென்னிலங்கை மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், எமது பிரதேசங்களில் இன்னும் அந்த மாயைக்குள் மக்கள் இருப்பதனை அவதானிக்க கூடியாக இருக்கின்றது.
குறிப்பாக எம்மத்தியிலே இருக்கின்ற புத்திஜீவிகள் சிலர் எமது மக்களை தவறாக வழிநடத்துக்கின்ற சூழலே காணப்படுகின்றது. அண்மையிலே ஒரு காணொளியை காணக்கூடியதாக இருந்தது, ஆட்சியளர்களை அவசரப்பட்டு குறைகூறக் கூடாது, ஒரு பிள்ளை பிறப்பதாக இருந்தால்கூட பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறானவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் பாசையிலேயே சொல்வதாக இருந்தால், ஒரு குழந்தை பிறப்பதற்கு பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் பத்தாவது மாதம் குழந்தை வானத்தில் இருந்து குதிக்காது. குழந்தை பிறப்பதென்றால்கூட, உளப்பூர்வமாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அந்த முயற்சிகள் உளப்பூர்வமானதாகவும் சரியான முறையிலும் முன்னனெடுக்கப்படுமாயின் மூன்றவது மாதத்திலிருந்து அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விடும். இங்கே புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்து விட்டன. எந்தவிதமான அறிகுறிகளும் தெரியவில்லை இதன் அர்த்தம். இவர்கள் எதற்கும் இலாய்க்கு அற்றவர்கள் என்தே வெளிப்படுத்தப்படுகின்றது.
எதற்கும் இலாய்கற்றவர்களின் வாக்குறுதிகளை நம்பிக்கொண்டிருக்காமல், வேலைத் திட்டங்களை முன்னெடுத்த அனுபவம் உள்ளவர்கள் யார்? உண்மையான தமிழ் தேசியத்தையும் அதற்கான அடிப்படைகளையும் பாதுகாக்கின்றவர்கள் யார் என்பதை சரியாக புரிந்த கொண்டு எதர்காலத்தில் அவ்வாறானவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.