“நிலங்கடந்தவள்” நூலினை வாசிக்க கையில் எடுத்த போது எல்லாக் கவிகள் போலவே இருக்கும் என்று எண்ணியே தாள்களை புரட்டினேன். தாள்களில் ஊண்டப்பட்ட கறுப்பு சாயங்கள் என்னை மென்மையாக கலங்கடிக்கச் செய்தது. கவிதைகளில் கவித்துவத்தையும் சமூக மாற்றத்தையும் இயற்கை அழகையும் அழகுற அழகுபடுத்தும் வேலையையே கவிஞர்களின் விரல்கள் செய்கிறது. ஆனால் இக்கவிஞர் கிராமத்து மண் வாடையையும் வழித்து கொண்டு வந்து கவி செய்துள்ளார்.
தில்லை எனும் புனைப்பெயர் கொண்டவரால் எழுதப்பட்ட “நிலங்கடந்தவள்” எனும் கவிதை நூலானது மாண்டு வரும் அரிய சொற்கள் பலவற்றை கைபிடித்து உயிர் கொடுக்கிறது.
சங்க காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பல சொற்கள் மட்டக்களப்பு மாவட்டத்து மக்கள் பயன்படுத்தப்படுவதாக பல ஆய்வுகள் வெளிக்கொணர்ந்ததை அறிவோம்.
கவிதைகளில் ஆங்காங்கே பழமையானதும் கிராமத்துக்கு சொந்தமானதும் மாண்டுபோய்க் கொண்டிருப்பதுமான பல சொற்கள் நிரம்பி கிடக்கிறது. அவற்றில் ஒரு சிலவாக,
கனட்டி
பீச்சூத்து
சிணுங்குகிறது
நக்குவாரம்
மோக்கான்
பீ ஆமை
தொம்பல்
போன்ற பல சொற்கள் அடிக்கடி இவர் கவிகளில் முளைத்து வளர்கிறது.
சில வேளை தனது சொந்த மண் மீதான பரிசத்தினாலும் ஏக்கத்தினாலும் கவிஞர் மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்குகளில் பயன்படுத்தபட்ட சொற்களை தம் கவிகளுள் பயன்படுத்தி இருக்கலாம். இவருடைய கவிதைகளை ஒவ்வொன்றாக வாசிக்கும் போது எனக்கு தெரியாமலேயே எனது உதடுகள் சிரித்தது. தொடர்ந்து வாசிக்கின்ற போதுதான் எனக்கு முன்னமே அறிமுகம் இல்லாத இக்கவிஞர் மட்டக்களப்பு மண்ணில் தான் பிறந்திருக்கிறார் என்று நம்பத்தள்ளியது.
கவிஞரின் எழுத்துக்கள் வலிகளையும் பல அனுபவங்களையும் விடுதலையையும் நோக்கியே பயணிக்க கூடிய ஒருவரது சிந்தனையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
ஒவ்வொரு கவிஞர்களும் தாம் பிறந்து வளர்ந்த சூழலை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது நிலங்கடந்தவள் நூலின் ஆசிரியரான தில்லையின் மறைமுகமான நீரோட்டமாகும்.
விமர்சகர்,
எழுத்தாளர் ,
-ஆதன் குணா-

