“ஹிம்புல்கொட பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகின்றேன். இந்தக் காணி கொள்வனவு விவகாரத்தில் தங்காலை, கால்டன் ஹவுஸ் முகவரியை வதிவிடமாகக் கொண்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.” – இவ்வாறு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“ஹிம்புல்கொட பகுதியில் உள்ள விகாரைக்குள் பலவந்தமான முறையில் நுழைவதற்கு நான் முயற்சித்ததாகக் கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இந்தக் காணிக்கான உறுதிப்பத்திரத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டுள்ளேன். இந்தக் காணி விகாரைக்குச் சொந்தமானது என்று உறுதிப்பத்திரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
ஹிம்புல்கொட இஹல்யாகொட கே.டி.பராக்ரம என்பவருக்குச் சொந்தமான காணி கைப்பற்றப்பட்டு ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணி 10 இலட்சம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 2012.03.02 ஆம் திகதி கே.டி. தமித் பிரேமலால், என். கே. சுவர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான காணிகள் தங்காலை வீதி, கால்டன் ஹவுஸ் இல.19 என்ற முகவரியில் வசிக்கும் ஷிரந்தி ராஜபக்ஷ என்பவரின் பெயருக்கு எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பத்திரத்தில் 535253314 வி என்ற தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காணிகள் 5 இலட்சம் ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காணிகள் 2023.10.10 ஆம் திகதியன்று அமில கொடிகார என்பவருக்கு 120 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் இந்தப் பிரதேச மக்கள் முறைப்பாடளித்தார்கள். அதனால்தான் அங்கு சென்றேன்.
இந்தக் காணி உரித்து பத்திரத்தில் இந்தக் காணிகள் விகாரைக்கோ அல்லது விகாராதிபதிக்கோ சொந்தமானது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. விகாரைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
ஆகவே, இந்தப் பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பு மற்றும் காணி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.