நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (20) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இதில் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
இன்றைய தினம் குறித்த வேட்பு மனுக்களை இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, சர்வஜன அதிகாரம், தேசிய ஜனநாயக கூட்டணி, நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி உள்ளிட்ட சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு தாக்கலின் பின் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் ஒன்பது சபைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் திருகோணமலை மாநகர சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளை நிச்சயமாக கைப்பற்றுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
13 சபைகளில் தனித்து சிறந்த அணியாக போட்டியிடுகிறோம். இந்த தேர்தலை கட்டாயமாக நடாத்தியாக வேண்டும் என்ற ரீதியில் மக்களது சிறந்த தெரிவாக இது அமையலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். இருந்த போதிலும் தேர்தலின் போது பல சபைகளை கைப்பற்றி மக்களுக்கான திறந்த வெளிப்படையான சேவையை ஆற்றுவோம் இதற்காக சிறந்த வேட்பாளர்களை நிலை நிறுத்தியுள்ளோம் என்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்பது சபைகளில் மரச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
இம் முறை பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் ஐந்து சபைகளை கைப்பற்றுவோம் என்றார்.



